மட்டக்களப்பு மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தீர்மானிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவே இந்த அரசாங்க அதிபரின் செயற்பாட்டை கண்டித்து அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை (17) விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு காரியாலத்திற்கு சில விவசாயிகள் சென்று அரசாங்க அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்தனர்
இது தொடர்பாக விவசாயிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
2024, 2025 பெரும் போக செய்கைக்கான முன்னோடிக் கூட்டம் கச்சேரியில் இடம்பெற்று ஆரம்ப கூட்டம் ஒவ்வொரு பிரதேசத்தில் இடம்பெற்று அதற்கான வேலைத்திட்டம் இடம்பெற்று, தற்போது அறுவடைக்கு சில காலம் இருக்கும் நிலையில் ஒரு சில விவசாயிகளின் நலன்கருதி அரசாங்க அதிபர் அவர்கள் முன்கூட்டி அறுவடை செய்வதற்கான அனுமதி வழங்கியுள்ளார்.
இவ்வாறான செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் யார் என்றால் முதலாளித்துவ வர்க்கம் என்கின்ற நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் வேளாண்மையை செய்கின்றவர்கள். அதுமட்டுமல்லாது கூடுதலான வெட்டு இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்கின்ற இவர்களே இவ்வாறான அத்துமீறல் செயற்பாட்டை செய்கின்றனர்
இவர்கள் விவசாய அமைப்புக்களை சார்ந்து பிரதேசத்தின் கமநல அமைப்புக்களின் தலைவர்களாக திட்ட முகாமைத்துவ உப தலைவர்களாக இருந்து கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது மிலேச்சத்தனமானது
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலச்சம் ஏக்கருக்கு மேலாக வேளாண்மை செய்துவரும் நிலையில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு அறுவடை செய்ய கொடுப்பதன் மூலமாக ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் .
களத்தில் நின்று விவசாயிகளின் கஷ்ட நஷ்டத்தை பாராத இவர்கள் குளிர் ஊட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு மேசையில் இருந்து எழுதிக் கொண்டு அனுமதி வழங்குவதை ஒரு காலமும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு மனித உரிமை ஆணைக் குழுவில் முறைபாடு செய்துள்ளோம் என்றனர்.
இதேவேளை இது தொடர்பாக அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவிக்கையில்.
கடந்த 15 ம்திகதி விவசாயி ஒருவர் கச்சேரிக்கு வருகைதந்து தான் செய்த வயல் நிலங்கள் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகைபடங்களை காண்பித்தார். இருந்தபோதும் கூட்டத்தில் அறுவடை தினமாக ஜனவரி 20 ம் திகதி என தீர்மானிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது ஆனாலும் அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர்வந்து தமது வேளாண்மை அழிவடைவாதாகவும் உடனடியாக அறுவடை செய்யாவிட்டால் பாரிய நஷ்டத்தை எதிர் நோக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்
எனவே அனர்த்த நிலமைழயை கருத்தில் கொண்டு அவருக்கு இதனால் பாரிய நஷ்டம் ஏற்படுமாக இருந்தால் நீங்கள் உங்களுடைய வயலை மட்டும் அறுவடை செய்யலாம் அதுவும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் விவசாய போதனாசிரியர் ஆகியோரின் மேற்பார்வையில் செய்யலாம் என தெரிவித்து அனுப்பிவைத்தேன்.
நஷ்ட ஈடு வழங்கினாலும் அது அரசாங்கத்துக்குதான் பண நஷ்டம் ஏற்படும் எனவே அவர் ஒருவரது தனிப்பட்ட விடையத்துக்கு அனர்த்த நிலமையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. இது பொதுவான அறிவித்தல் அல்ல விவசாய கூட்டத்தல் 20 ம் திகதி அறுவடை என எடுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்படவில்லை இது தொடர்பாக பல விவசாய அமைப்புக்கள் வந்தால் இது போன்ற விடையங்கள் எங்களால் பார்வையிடமுடியும். இது ஒரு தனிப்பட்ட விடையம் என்பதால் தாங்களுடைய பிரதேசத்தில் இப்படி ஏற்பட்டால் தாங்கள் சென்று பார்த்து செய்வோம். இது தொடர்பாக மாவட்ட செயலகத்துக்கு வந்து முறையிட தேவையில்லை என கூறிச் சென்றனர் என அவர் தெரிவித்தார்.