மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டை அரசாங்கம் கையகப்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக நாட்டைக் காப்பாற்றிய தலைவரின் பாதுகாப்பை நீக்கவோ அல்லது விஜேராமாவின் வீட்டிலிருந்து அவரை அகற்றவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் வெறுப்புடன் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த விடயங்கள் யாருடைய நலனுக்காக செயற்படுத்தப்படுகிறது என்பதையும் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், களுத்துறையில் நேற்றையதினம்(20) இடம்பெற்ற கூட்டமொன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இல்லத்திற்கு வாடகையாக ரூ. 4.6 மில்லியன் செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அநுர குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த கருத்துக்கு மகிந்த ஆதரவு தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.