நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் குழுவின் தலைவர் அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நேற்று முன்தினம் (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதற்கமைய, இலங்கை பொலிஸ், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான அதிகார சபை ஆகிய நிறுவனங்களை குழு முன்னிலையில் அழைத்து இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு தற்போதைய நிலைமையை கண்டறிவது அவசியமானது என குழுவின் தலைவர் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
அதற்கமைய, அந்த நிறுவனங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான மூலோபாயத் திட்டம் மற்றும் அது தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.