கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் விடுத்த ஹர்த்தால், கடையடைப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பின் இயல்பு நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றே கூறலாம்.
யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் எனப் பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தது. மருந்துக்கடைகள், சாப்பாட்டுக்கடைகள் தவிர ஏனையகடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. தனியார் போக்குவரத்து நடை பெறவில்லை. இ.போ.ச இயங்கியது, பயணிகள் குறைந்தளவிலேயே இருந்தனர். பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்தது. “சர்வதேசமே எமக்காக குரல் கொடு” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்னால் ஆரம்பமான பேரணி மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. கிழக்கில் திரு கோணமலை, மட்டக்களப்பு ஆகிய நகரங்கள் வழமைபோல் இயங்கின.ஹர்த்தால், கடையடைப்பு என்பன அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் சமிக்ஞையாகும். அரசாங்கத்துக்கு எதிராக வடக்கும் கிழக்கும் கைகோர்த்து தமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டவில்லை. இப்படியான எதிர்ப்பைக் காட்டுவதற்கு வடக்கும் கிழக்கும் ஒன்றிணைய வேண்டியது மிகவும் அவசியம்.