சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குவைட்டில் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்கியிருந்தார்.
43 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாபா கருத்து வெளியிட்டுள்ளார்.
“இந்த இலங்கையர் ஒன்றரை கிலோ கிராம் எடையுடைய ஐஸ் போதைப் பொருளும், 500 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.போதைப் பொருளை வைத்திருந்தார் என்பதே இந்த இலங்கையருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்” என தெரிவித்துள்ளார்.
தமது பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வந்து தாயிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்பதே குறித்த இலங்கையரின் இறுதி விருப்பமாக அமைந்திருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.