ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரிவிதித்துள்ளதால் தற்போதுள்ள வரிகளுக்கு மேல் அதிகமாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு 15 சதவீத வரியையும், எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10 சதவீத வரியையும் சீனா விதித்துள்ளது.
சீனாவின் சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விதிமுறைகளை மீறிய அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே மீண்டும் ஒரு வர்த்தகப் போர் ஏற்படலாம் என கருதப்படுகிறது.