கடந்த வருடம் அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்துக் கொள்வனவுக்காக செலவிடப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வைத்திய பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நோய்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்புக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை மருந்தாகப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பாடசாலை விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் முதற் கொண்டு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரும் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி என்பது சுகாதார சேவையுடன் ஒன்றிணைந்த ஓர் அம்சமாக உள்ளது. ஆகையால் சுகாதார அமைச்சு இது தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன் எதிர்வரும் நாட்களில் இதை வலுப்படுத்துவதும் அவசியம் என்றார்.