பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பதென்பது உண்மையில் நீதி மற்றும் சமாதானத்திற்கான அதிகாரத்தை கொடுப்பதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேர்காணலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இலங்கையில் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் மத்திய அரசாங்கத்திற்கான பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான பொலிஸ் என இரு பிரிவு உருவாகும்.
அப்படியாகிவிட்டால் மத்திய அரசாங்கத்திற்கான பொலிஸாரால் ஒரு சில குற்றச்செயல்கள் தொடர்பில் மாத்திரமே தேடிப் பார்க்க முடியும். பணம் சம்பந்தமான மற்றும் வெளிநாடுகள் தொடர்பான குற்றங்களையே தேடிப்பார்க்க முடியும்.
அப்பொழுது மாகாணசபை தான் பொலிஸ் அதிகாரத்தை கையிலெடுக்கும். பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பதென்பது உண்மையில் நீதி மற்றும் சமாதானத்திற்கான அதிகாரத்தை கொடுப்பதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ய நினைத்ததையே தற்போது தமிழ் அரசியல்வாதிகள் அடைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவர்களின் கையில் ஆயுதம் இல்லை. அது மாத்திரமே வித்தியாசம்.
புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தில் ஈழ அரசாங்கத்தை உருவாக்கி அதன் பிரதமராக ‘ருத்ரகுமாரன்’ என்ற சட்டத்தரணியை நியமித்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது நாடு பாரிய ஆபத்தில் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.