கொழும்பில் பிரபலமான கிரிஷ் கட்டடத்தில் இரவு வேளையில் ஏற்படும் தீ விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம்(07) தொடர்ந்து இரண்டு நாட்களாக தீப்பிடித்து எரிந்த கொழும்பு கோட்டை கிரிஷ் கட்டடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 20 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தீ விபத்துகள் குறித்து அரச பகுப்பாய்வாளரிடமிருந்து அறிக்கை பெறப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கொழும்பு கோட்டை கிரிஷ் கட்டிடத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் தீ விபத்துகள் ஏற்பட்டிருந்தன.
நேற்று கிரிஷ் கட்டடத்தின் 24வது மாடியில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்(06) கிரிஷ் கட்டடத்தின் 35வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து, 34வது மாடிக்கும் பரவியது. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.