ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருளுடன் பொயிலைக்குள் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை சூட்டசகமாக மறைத்து கொண்டு சென்ற 27 வயதுடை மனைவியை இன்று (18) சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவுக்கு அமைய, மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு ஒரு மாதகாலமாக இருந்து வருகின்றார்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் 12.30 மணிக்கு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை பார்ப்பதற்காக உணவு மற்றும் புகையிலை ஆகியன மனைவி எடுத்துச் சென்ற நிலையில், அவைகளை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டபோது பொயிலைக்குள் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டதுடன், அவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட ஓட்டமாவடி 3 ம் பிரிவு உசேனியா வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை, சிறைச்சாலை அதிகாரிகள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.