வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் மற்றும் குரல் பதிவுகளை அனுப்புவதன் மூலம் பல பெண்களை துன்புறுத்திய குற்றசாட்டில் 49 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடமத்திய மாகாண சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அனுராதபுரம், பந்துலகமைச் சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியிருந்தனர்.

இந்தநிலையில் பெண்கள் மோட்டார் சைக்கிள்களை பழுதுபார்ப்பதற்காக திருத்துமிடம் ஒன்றுக்கு சென்ற போது அங்கு பணிபுரியும் சந்தேகநபர் உத்தியோகபூர்வ அடிப்படையில் அவர்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு பின்னர் வேறொரு தொலைபேசி இலக்கம் மூலம் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் சந்தேகநபர் நேற்று 17ஆம் கைதுசெய்யப்பட்டு, இன்று 18ஆம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.