அநுர அரசுக்கு ஏற்றால் போல் அரசியல் செய்ய நாம் தயாரில்லை. அவர்களின் ஆட்டத்துக்கு எம்மால் ஆட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
வழக்கு விசாரணைக்காகக் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நேற்று வருகை தந்த அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக இயங்கும் என நாம் நம்புகின்றோம். அதனை அரசு உறுதி செய்ய வேண்டும்.

வழக்கு விசாரணைகளின்போது எமது நேர்மைத் தன்மையை நாம் நீதிமன்றத்தில் நிரூப்பிப்போம்.
அநுர அரசுக்கு ஏற்றால் போல் அரசியல் செய்ய நாம் தயாரில்லை. அவர்களின் ஆட்டத்துக்கு எம்மால் ஆட முடியாது. எமக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. எமது பிணைப்பு மக்களுடனேயே உள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவால் தயாரிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டமே தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.
எனினும், தேர்தல் காலங்களில் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை வாக்களித்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவினால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது வரவு – செலவுத் திட்டத்தை மாற்றம் செய்து அவரை விடச் சிறப்பாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ளார். – என்றார்.