ஏறாவூர் மயிலம்பாவெளி பிராதன வீதியில், மதுபோதையில், சிவில் உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி, அவர் மீது தலைக்கசவத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் நேற்று (18) இரவு 7.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,

வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி, மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த வர்த்தகர் குணரட்னம் மதிகுமார், ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதியிலுள்ள கிராம சேவகர் காரியாலயத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி சென்றபோது, இருவர் குறித்த மோட்டார் சைக்கிளை முந்தி சென்று “தாம் பொலிஸ், நீ பிழையாக மோட்டார் சைக்கிள் செலுத்துவதாக” தெரிவித்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தி, வர்த்தகர் மீது தமது தலைக்கவசத்தால் தலையில் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் கூடி, பொலிசாரை அங்கிருந்து செல்லவிடாது தடுத்து நிறுத்தி, பொலிஸ் அவசர இலக்கமான 1919 என்ற தோலைபேசி இலக்கத்துக்கு அறிவித்ததையடுத்து, அங்கு ஏறாவூர் பொலிசார் முச்சக்கரவண்டியில் வந்து விசாரணையை மேற்கொண்ட போது, தாக்குதலை நாத்திய பொலிசார் இருவரும் மதுபோதையில் இருப்பதை கண்டுபிடித்த பொலிசார், அவர்கள் இருவரையும் தமது முச்சக்கரவண்டியின் முன்னால் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் குறித்த பொலிசார் இருவரும், பொலிஸ் நிலையத்துக்கு செல்லாமல் அருகிலுள்ள வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த இரு பொலிசாரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவில் கடமையாற்றி வருபவர்கள் எனவும், சம்பவதினமான நேற்று காலை11.00 க்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகிவரும் இருவரை கைது செய்வதற்காக கடமை கையோட்டில் கையொப்பமிட்டு, பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மது போதையில் தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாருக்கும் எதிராக பாதிக்கப்பட்ட வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
