அமலாக்க இயக்குனரகம் (ED), சென்னை மண்டல அலுவலகம் பண மோசடி தடுப்புச் சட்டம் 2002 விதிகளின் கீழ், இயக்குநர் ஷங்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் ரூ. 10.11 கோடி மதிப்புள்ள மூன்று அசையாச் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்தப் படம் எந்திரன். மிகப்பிரமாண்ட தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் உலகம் முழுக்க சுமார் ரூ. 290 கோடி வசூல் செய்தது.

ஆனால், எந்திரன் படத்தின் கதை தன்னுடைய ‘ஜூகிபா’ புத்தகத்தின் கதை என அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2011ம் ஆண்டு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், ஜூகிபா புத்தகத்தின் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன், ‘எனது கதையைத் திருடி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இது காப்புரிமை சட்டம் 1957 மற்றும் ஐபிசி 1860 ஆகியவற்றை மீறிய குற்றம்’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும், ‘நாங்கள் கதையைத் திருடவில்லை. இந்த வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு இடைக்கால தடை விதித்தது. பின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் எழும்பூர் நீதிமன்றம் வழக்கை நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜூகிபா கதை ஆசிரியர் தொடர்ந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.