‘பிடியளவு கமநிலத்துக்கு’ இலங்கையில் பயிரிடப்படாத சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாக பயிரிடும் தேசிய செயற்பாட்டிற்கு ஒன்றிணைவோம் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வு இன்று (22) வாகரை பிரதேச வட்டவான் விவசாயக் கண்டத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கி.ஜகன்நாத்தின் வழிகாட்டலில் வாகரை கமநல சேவைகள் நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் க.கலியகராஜ் தலைமையில் பிரதேச விவசாயிகளுக்கு மேற்படி விடயம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு கதிரவன் விழிப்புணர்வு அரங்கக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் இது தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
மேற்படி தேசிய வேலைத்திட்டமானது நாடு பூராகவும் 2025 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் கமநல அபிவிருத்தி திணைக்களம்,கமத்தொழில் கால் நடை வளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சினால் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் வயற் காணி மேட்டு நிலத்தை உற்பத்தி திறன் மிக்கதான பயிர் செய்கைக்கு ஈடுபடுத்துவதன் மூலம் உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டான கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றிய அபிமானமிக்க பிரஜையாக உருவாக்கப்படுதலாகும்.
இன்றைய நிகழ்வில் கிராம சேவகர் எம்.நவீன் உட்பட வாகரை கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகளும்,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





