அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம், ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் செய்ததற்காக டெலிகிராமுக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதித்துள்ளது.
நாட்டின் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தை அளவிடுவதற்காக மெட்டா, வான்ஸ்அப், கூகுள், ரெடிட், எக்ஸ் மற்றும் டெலிகிராமிருந்து வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம் கடந்த மார்ச் மாதம் கோரியிருந்தது.

ரெடிட் மற்றும் டெலிகிராம் ஆகியவை சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் (CSAM), பயங்கரவாத மற்றும் வன்முறை தீவிரவாத உள்ளடக்கத்தைக் கண்டறிந்து எதிர்கொள்வதற்கான அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அதன் நேரடி ஸ்ட்ரீமிங்கைத் தடுக்க தளங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து குறிப்பாகக் கேட்கப்பட்டது.
ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தகவலின்படி, மற்ற தளங்கள் கட்டுப்பாட்டாளர் நிர்ணயித்த 6 மே காலக்கெடுவிற்கு இணங்கினாலும், டெலிகிராம் ஒக்டோபர் 13 அன்று மட்டுமே பதிலளித்தது.

காலக்கெடு முடிந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் செய்தியிடல் தளம் வெளிப்படைத்தன்மை அறிவிப்புக்கு இணங்கவில்லை எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் கேட்கப்பட்ட தகவலை வழங்குவதற்கு 160 நாட்கள் எடுத்துக்கொண்டது, இந்த தகவலை மிகவும் தாமதமாக வழங்கியதால் கிட்டத்தட்ட அரை வருடமாக ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம் (eSafety) அதன் செயல்பாடுகளை வழங்குவதில் பாதிப்பினை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெலிகிராமுக்கு இப்போது அபராதம் செலுத்த 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.