முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது, மாத்தறை நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாகப் பெயரிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள வீடு உட்பட நான்கு வீடுகள் நேற்று (28) சோதனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் அந்த வீடுகள் எவற்றிலும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையிலேயே அவருக்கு இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.