கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று நேற்று (02) திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒவ் மீடியா ஊடக கற்கைகள் ஆய்வு நிலையத்தில் நடைபெற்ற போது கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமிழ் ஊடகவியலாளர்களுக்கான புதிய ஒன்றியத்தின் நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன.
இதற்கமைய ஒன்றியத்தின் தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கணகராசா சரவணனும், ஒன்றியத்தின் செயலாளராக சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய சாமஸ்ரீ தேசமானிய உ.உதயகாந்த், பொருளாளராக ஊடகவியலாளர் ஜே.ருக்சிக்கா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒன்றியத்தின் பிரதி தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.வரதராஜன், உப செயலாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் க.ருத்திரன், ஊடக இணைப்புச் செயலாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.பத்மசிறி, நிர்வாக உறுப்பினர்களாக ஊடகவியலாளர்களான அ.அலெக்ஸ், மு.கோகுலதாசன், எம்.பிரியந்தன், ஆர்.நிரோசன், எஸ்.ஞானச்செல்வன், எஸ்.சோபிதன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் இதன் போது மரணித்த ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து நிகழ்வின் ஆரம்பத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஒன்றியத்தின் செயற்பாடுகளை கண்காணித்து ஆலோசனைகளை வழங்க உயர்பீடம் ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான உறுப்பினர்களாக சிரேஸ்ட ஊடகவியலாளர்களான அ.அருள் சஞ்ஜீத், அ.லியோன்ராஜ், ஏ.சிறிகாந்தராஜ், எஸ்.தவபாலரெட்ணம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கான காணி வழங்கும் போது புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான காணி வழங்குதல், வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்தல், ஊடகவியலாளர்களுக்காக கிழக்கு மாகாணத்திற்குள் தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து பஸ்களில் பயணிக்க கூடிய இலவச பஸ் பாஸ் போன்ற மேலும் பல சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்திவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.


