பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் காவல்துறையினரிடம் சரணடைய வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் காவல்துறை மா அதிபர் காவல்துறையினால் தேடப்பட்டு வருகின்றார். அவருக்குப் பின்னால் பெருமளவான காவல்துறையினர் செல்வது உரிய நடவடிக்கை அல்ல.
ஆகவே, முன்னாள் காவல்துறை மா அதிபர் விரைவில் காவல்துறையில் சரணடைய வேண்டுமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள வீடு உட்பட நான்கு வீடுகள் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் அவர் குறித்த வீடுகள் எவற்றிலும் இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.