கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாடசாலைகளில் இடம்பெறும் நிதி சேகரிப்பு தொடர்பில் துரித விசாரணைகள் நடத்தப்படுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் கல்விச் சீர்திருத்தம், பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல், மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவூட்டுதல், மதிப்பீடுகளின் அடிப்படையில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் விளக்கினார்.
இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்காக உபகுழுக்களை நியமிப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும், புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒவ்வொரு பாடசாலையையும் பற்றி பௌதீக ரீதியாக ஆய்வு செய்து, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்யவும், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்கவும், பாடசாலைகளில் உள்ள பாதுகாப்பற்ற இடங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக புனரமைத்து அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஆசிரியர் சமநிலையை பேணும் வகையில் இடமாற்றங்களை மேற்கொள்ளுதல், அதிபர் வெற்றிடங்கள் மற்றும் பதிற்கடமை, மாகாண பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள், கல்வி நிர்வாகத்தில் நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.