வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த இரண்டு பயணிகள், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்னர்.
குறித்த கைது நடடிக்கையானது நேற்று சனிக்கிழமை (08) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கண்டி – குண்டசாலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய தனியார் துறை ஊழியர் ஆவார்.

இவர் நேற்றையதினம் (08) 05.00 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மற்றைய நபர் கண்டியைச் சேர்ந்த 50 வயதுடைய உடற்கட்டமைப்பு பயிற்றுவிப்பாளர் ஆவார், இவர் இன்றையதினம் 01.10 மணியளவில் துபாயிலிருந்து ஃப்ளை துபாய் விமானம் FZ-569 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இவர்கள் இருவரின் பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த , வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 34 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மதிப்புடைய 23,000 “மான்செஸ்டர்” மற்றும் “பிளாட்டினம்” வகை சிகரெட்டுகள் அடங்கிய 115 சிகரெட் கார்டூன்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, எதிர்வரும் 12 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.