கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றி 45 மில்லியனுக்கும் அதிகமான ரூபாயை வசூலித்த ஒரு பெண் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான குறித்த பெண், 31 வயதான திலினி ஷாமென் ஷாக்மேன் என்பவர் எனவும் பதுளையில் உள்ள கந்தேகெதரவில் வசிப்பவர் மற்றும் மூன்று குழந்தைகளின் தாயார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றி, அவரிடமிருந்து 500,000 ரூபா பணத்தைப் பெற்று பின்னர், அவரைத் தவிர்த்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸாரால் அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவர் பிணை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் பொலிஸில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் அதைப் புறக்கணித்து ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்துள்ள நிலையில் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஹட்டன் தொடருந்து நிலையத்தில், தொடருந்தில் வரும் ஒரு தோழிக்காகக் காத்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.