முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023 செப்டம்பரில் ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்தின் போது, 1000 பவுண்டுகளுக்கு ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்தியதாக, சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த 1,000 பவுண்டுகள் என்பது, குறித்த பணியாளருக்குக்கான ஒரு நாள் சம்பளம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில், மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம், ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட பயணமாகத் திட்டமிடப்பட்டது.
எனினும்,ரணில் விக்ரமசிங்க, தமது மனைவி, சேனாரத்ன திசாநாயக்க, சாண்ட்ரா பெரேரா, ஒரு மருத்துவர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவுடன் வோல்வர்ஹாம்ப்டன் மற்றும் லண்டனுக்குப் பயணம் செய்தார்.

இந்தப் பயணத்திற்கான 2023, ஆகஸ்ட் 16, அன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து “மிகவும் அவசரமான” மற்றும் “கண்டிப்பாக இரகசியமான” விதிமுறைகளின் கீழ் நிதி கோரப்பட்டது.
இந்தப் பயணம் ஆரம்பத்தில் தனிப்பட்ட பயணமாகக் கருதப்பட்டாலும், அதனுடன் தொடர்புடைய செலவுகள் சுமார் 40,000 பவுண்டுகள் ( 16.2 மில்லியன் ரூபாய்களாக) உயர்ந்தன. இந்தப் பயணத்தின் நோக்கம் திருத்தப்பட்டு, அது ஒரு அதிகார பூர்வ பயணமாக மறுவகைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே, குறிப்பாக பணியாளரின் சேவைகளுக்காக 2,000 பவுண்டுகள் செலுத்தப்பட்டன.
எனவே, இந்த பயணத்திற்கான செலவுகள் குறித்து அமைச்சர் உட்பட வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழைப்பு விடுத்தார்.
இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் இலங்கை எதிர்கொண்ட நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும் என்று ரத்நாயக்க கூறியுள்ளார்.