பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விசேட அறிவிப்பின் பின்னர் அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ரணில் விக்ரமசிங்க பேசுவதற்கு தற்போது மிகவும் தாமதமாகிவிட்டதாகவும் அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், ஏப்ரல் 10 மற்றும் மே மாதங்களில் இரண்டு நாள் விவாதத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்களுக்கு அமைச்சர் நளிந்த அறிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழுவை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவாதத்தை நடத்துவதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் வாதிட்டும் விவாதத்திற்கான திகதியை அராசாங்கம் முடிவு செய்துள்ளதாவும் அமைச்சர் அதன்போது கூறியுள்ளார்.
இந்த நிலையில், நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிக்காக இந்த விவதாத்தை நடத்தவுள்ளதாகவும் மக்கள் உண்மைகளை அறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பட்டலந்த சம்பவம் குறித்து A முதல் Z வரை அறிந்தவர் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கே என்றும், அல் ஜசீரா ஒரு சமீபத்திய நேர்காணலின் போது அதனை கேள்வி எழுப்பும் வரையில் அது குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்றும அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக ரணில் இதைப் பற்றிப் பேசியிருக்கலாம் என்றும் தற்போது ரணில் மிகவும் தாமதமாகிவிட்டார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.