இன்றைய நிலையில் ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள் இல்லாத நிலைமயே காணப்படுகின்றது. இந்த நிலையில் நாங்க இலகுவாக வெல்லக் கூடிய சூழ்நிலையே உள்ளது , அதேசமயம் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கும் வாழ்த்துகிறேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை இன்று (17) செலுத்தியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கு இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு உதவி தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி, மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினொரு உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளோம். காத்தான்குடி நகரசபையைத் தவிர்த்து ஏனைய சபைகளுக்கான கட்டுப்பணம் இன்று எம்மால் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 96000 வாக்குகளைப் பெற்றிருந்தோம். இந்த உள்ளுராட்சித் தேர்தலில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறும் வகையில் தேர்தல் வியூகங்களை அமைத்துள்ளோம்.
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்து என்பதைத் தாண்டி கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.
2020ம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் அட்சி பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலிலே நாங்கள் அதிகளவான வாக்குகளைப் பெற்றோம். அதே போலவே இந்தத் தேர்தலிலும் எங்களுக்கு வட்டாரங்கள் வெல்வதும், உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்வதை விடவும், கட்சியின் வாக்கு வங்கியினை அதிகரித்தலினூடாக இந்த இரண்டு விடயங்களையும் நாங்கள் மிகவும் இலகுவாகச் செய்து முடிக்கலாம்.
இன்றைய நிலையில் ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள் இல்லாத நிலைமயே காணப்படுகின்றது. இந்த நிலையில் நாங்கள் இலகுவாக வெல்லக் கூடிய சூழ்நிலையே உள்ளது.
ஏனெனில் 2018ம் ஆண்டு இந்தத் தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போது அதிலே கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து 2023ம் ஆண்டு தேர்தலில் சில சில மாற்றங்களைச் செய்தோம், அதிலும் சில குறைபாடுகளை அவதானித்து தற்போது 2025ம் ஆண்டு வேட்பாளர்களைத் தெரிவு செய்து சிறந்த வேட்பாளர்களைத் தெரிவு செய்திருக்கின்றோம்.

இன்னும் ஓரிரு நாளில் வேட்புமனுத் தாக்கலை நாங்கள் செய்வோம். தற்போது இந்தத் தேர்தல் முறையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டமையால் பல இளைஞர்களுக்கு இடம்கொடுத்துள்ளோம். அந்த அடிப்படையிலும் இம்முறை வேட்பாளர் தெரிவில் பல மாற்றங்களைச் செய்துள்ளோம்.
எது எப்படி இருந்தாலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கட்டுப் பணம் செலுத்தியுள்ள பதினெரு சபைகளில், ஒன்பது சபைகளில் நாங்கள் இம்முறை ஆட்சியமைப்போம். ஏனைய ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் நாங்கள் ஆதரிக்கும் தரப்பு ஆட்சியமைக்கும் சூழலையும் உருவாக்குவோம்.

தற்போது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற ஒன்று உருவாக்கப்பட்டு இருவரும் இன்னமும் மாவட்டத்தில் அரசியல் செய்யும் ஆசையில் உள்ளார்கள் என்பதைத் தெரியப்படுத்தியுள்ளார்கள். இன்னமும் வேட்பாளர் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற செய்தியும் உள்ளது. அவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகின்றோம்.
எங்களுடைய மத்திய குழுவின் தீர்மானத்திற்கமைவாக எந்தவொரு உள்ளூராட்சி சபைகளிலும் மேயர், தவிசாளர் என்ற வாக்குறுதிகள் வழங்குவதில்லை.
