யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைக்கப்பட்டுள்ள கா.பொ. த சாதாரண தரப் பரீட்சை நிலையமொன்றில் நேற்று (19) காலை 7:30 மணியளவில் மாணவர்களிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் கா.பொ. த சாதாரண தரப் பரீட்சை நிலையம், இரண்டு பாடசாலைகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை நிலையத்தில் நேற்று (19) காலை 7:30 மணியளவில் இரு பாடசாலை மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
முறுகல் கைகலப்பாக மாறியிருந்த நிலையில் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் முதலாம் பகுதி வினாத்தாள் நேரம் முடிவடைந்த நிலையில் நண்பகல் 11:15 மணியளவில் வெளியில் இருந்து ஒரு தரப்பு பரீட்சை நிலைய வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து ஒரு தரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதனையடுத்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளரினால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளரினால், எழுத்து மூலமாக பரீட்சை நிறைவு மெறும் வரையான காலம் வரை பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரி முறைப்பாடொன்றை மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பரீட்சை நிறைவடையும் வரை நடமாடும் பொலிஸ் பாதுகாப்பினை வழங்க முன்வந்ததுடன் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.