கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற, வடகிழக்கு பிரிவினையை ஏற்படுத்தி, பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கூட்டமைப்பாக உருவாகினால் அது நல்ல கூட்டமைப்பாக இருக்கவேண்டும். நாங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டவர்கள். ஊழல், மோசடி, இலஞ்சம், கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் நாங்கள்.
ஆனால் கடந்த காலத்தில் ஒரு கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோர் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதனை உருவாக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலமாகவும் உங்களது கேள்விகள் மூலமாகவும் நான் அறிந்து கொண்டேன்.
ஆனால் நான் சொல்ல வருகின்ற விடயம் என்னவென்றால் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறப்பட்டிருக்கின்றது. அண்மையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்த நீதிமன்ற தீர்ப்பு சொல்லப்பட்ட விடயத்தை அவ்வாறே கூறுகின்றேன.
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

நாங்கள் சொல்லவில்லை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பு அமைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்கலாம். ஆனால் அந்த கூட்டமைப்புக்கு உரியவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரு காலத்தில் ஒரு விடுதலை போராட்டம் என்பதனை உரிமையோடு போராடிய ஒரு கட்டமைப்பில் இருந்தவர்கள்.
ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை பிளந்து கொண்டு வந்து அந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் என்று கூட சொல்லுகின்றார்கள் மக்கள்.
ஆகவே இவ்வாறானவர்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று கூறுகின்றார்கள்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்றால் வடக்கு கிழக்கில் தமிழர்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கில் நாங்கள் இணைந்து செயல்படுகின்ற போதுதான் நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருக்க முடியும்.
மாறாக கிழக்கு என்றும், வடக்கு என்றும், மலையகம் என்றும், மட்டக்களப்பு என்றும், யாழ்ப்பாணம் என்றும் நாங்கள் பிரிந்து செயல்படுகின்ற போது, எங்களுடைய பலமான சக்தியை அழிக்கின்ற செயற்பாடாக தான் இருக்கும்.
ஆகவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர்களின் பலத்தை குறைக்கின்ற அல்லது வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளுகின்ற ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றது.

கடந்த காலத்தில் ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் போட்டி போட்டு அங்கு தமிழ் பிரதிநிதியாக வரவேண்டிய கோடீஸ்வரன் அவர்களின் வெற்றியை தடுத்து அதாவுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் தான் இப்போது இந்த கூட்டமைப்பில் வந்து சேர்ந்திருக்கின்றார்.
கடந்த காலத்தில் பல்வேறுபட்ட தவறான செயற்பாடுகளில், அதாவது இலஞ்சம் வாங்குகின்ற செயல்பாடுகள் மற்றும் கையூட்டல் வாங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் கட்சிகள் கூட இதில் இணைந்திருக்கின்றது.
எனவே கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், காணாமல் ஆக்குதல், திருட்டு, இலஞ்சம், தரகு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள்.
எனவே இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற கூட்டமைப்பு என்பதை விட பேரினவாத்திற்கு துணை போகின்றவர்கள் எனலாம்.
கடந்த காலத்தில் பெரும்பான்மை இன பேரிடவாதத்திற்கு துணை போய் அங்கு பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள், ராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள்.
ஆகவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். கடந்த காலத்தில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், மக்களின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று பல்வேறு பட்டவர்கள் இணைந்து செயல்படுகின்ற போது நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும்.
ஆகவே நீதிமன்ற தீர்ப்புக்கள் சட்ட நடவடிக்கைகள் என்று எல்லாம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இந்த கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதுவித பிரயோசனையும் இல்லை.

இவர்கள் கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
குறிப்பாக மாதவனை மைலத்தமடு இடங்களில் பெரும்பான்மை இணைத்தவர்கள் அத்துமீறி குடியேறிய போது ஒரு சத்தமும் போடாதவர்கள் தான் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள்.
அது இராஜாங்க அமைச்சர்களாக இருந்தால் என்ன, பிரதி அமைச்சர்களாக இருந்தால் என்ன மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற போது ஒரு சத்தமும் போடாமல் இருந்து கொண்டு தரகு மற்றும் இலஞ்சங்களை பெற்றுக்கொண்டு இருக்கின்றவர்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.
ஆகவே மக்கள் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதற்கு வாக்களிக்க கூடாது. வாக்களிக்க மாட்டார்கள் என நான் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் நாங்கள் எந்த ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகளில் இதுவரையில் கைச்சாத்திடவில்லை.
அவ்வாறு இடம்பெறவும் இல்லை. நான் அறிவிகின்றேன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக கேட்கின்றார்கள் நாங்களும் தனியாகத்தான் கேட்கின்றோம் எந்தவித ஒப்பந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்றார்.