பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லையெனவும் அதிபர் மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் பாலியல் இலஞ்சம் கோரியதாக சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டுவருவதாகவும் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோர் தெரிவித்தனர்.
காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு எதிராகவும் பாடசாலை நிருவாகத்திற்கு கெதிராகவும் போலியான பல குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வட்சப் குழுமத்தின் ஊடாகவும் பரப்பப்பட்டு வருவது குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள்,
பாடசாலை சுற்று நிரூபம் 6.2 இன் பிரகாரம் பாடசாலை அனுமதியில் 25 வீதம் பழைய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.
இதில்தான் சிறு பிரச்சனை காணப்படுகின்றது. இந்தப் பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவர் ஐந்து ஆறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருப்பார்.
பழைய மாணவர்களாக இல்லாமல் பாடசாலைக்கு அருகில் இருப்பவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறாதவிடத்து அவர்களை இணைத்துக் கொள்ள் முடியாது.
இந்த நிலையில் தான் பாடசாலைக்குத் தூரத்தில் இருப்பவர்களைச் சேர்த்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இதற்கான விளக்கத்தை நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றோம். இதற்காக பழைய மாணவர் சங்கத்தினால் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் முன்னர் விழிப்பூட்டல் கருத்தரங்குகளும் மேற்கொள்ளப்படும்.

அடுத்து 6.3ன் பிரகாரம் பாடசாலையில் தற்போது கல்வி கற்கும் பிள்ளைகளின் சகோதரர்களை 14 வீதம் சேர்த்துக்கொள்வேம். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் புள்ளிகளின் அடிப்படையில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
6.4 இன் பிரகாரம் கல்வியில் நேரடித் தாக்கம் செலுத்தும் பிள்ளைகள் என்ற அடிப்படையில் ஆறு வீதமானவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
6.5இன் பிரகாரம் இடமாற்றம் பெற்று வந்த பெற்றோர்களின் பிள்ளைகள் ஒரு வீதம் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், வெளிநாடுகளில் வசித்து இங்கு வந்திருக்கும் குடும்ப பிள்ளைகளுள் ஒரு வீதமும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
6.7ன் பிரகாரம் பாதுக்கப்பு தரப்பினரின் மற்றும் நீதிபதிகளின் பிள்ளைகள் இவர்களை நாங்கள் தெரிவு செய்வதில்லை. அவர்கள் கல்வி அமைச்சிற்கு விண்ணப்பித்து கல்வி அமைச்சினூடாக தெரிவு செய்யப்படுவர்.
இவ்வாறான நிலைமைகளின் மேற்குறித்த நிபந்தனையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் வெட்டுப் புள்ளிகளுள் உள்வாக்கப்படாதவிடத்து அந்த வெற்றிடங்களை பாடசாலைகளுக்கு அண்மித்து வசிக்கும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.

அந்த அடிப்படியில் பாடசாலைக்கு அண்மித்து வசிப்பவர்கள் என்ற அடிப்படை 50 வீதமாக விதிக்கப்பட்டிருப்பின் நாங்கள் அதற்கு அதிகமாகவே பிள்ளைகளை இணைத்துள்ளோம்.
இவ்வாறான நடைமுறைகளின் அடிப்படையில் இவ்வருடம் 160 மாணவர்களைப் புதிதாக இணைத்துள்ளோம். இந்த அனுமதிகளின் போது எங்களுக்குப் பல அழுத்தங்கள் வெளியில் இருந்து பிரயோகிக்கப்படும். அரசியல் அழுத்தங்களின் போது அவர்களிடம் விடயங்களைத் தெளிவுபடுத்துகையில் அவர்கள் அதனை விளங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.
அடுத்து எமது பிரதேச கல்விப் பணிப்பாளர் ஹக்கீம் அவர்களிடமிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. ஒரு குறித்த பிள்ளையை இணைத்துக் கொள்ளுமாறு. கடந்த முறையும் இவ்வாறான செய்ற்பாடுகளால் நாங்கள் மிகவும் கஸ்டத்திற்குள்ளானோம்.
குறித்த மாணவருக்குப் புள்ளி கிடைத்தால் நிச்சயம் அவருக்கான அனுமதி கிடைக்கும் என்று தெரிவித்தோம்.
இந்த நிலைமைகளைப் புரிந்துகொள்ளாத ஆட்கள், எமது பாடசாலையில் இடம் கிடைக்காத ஆட்கள் எமது பாடசாலைக்கு அவதூறு பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இனந்தெரியாத முகநூல் கணக்குகள், இணையத்தளங்கள் மூல பாடசாலை அதிபருக்குக் கலங்கம் ஏற்படுத்தி அதனூடாக பாடசாலை அனுமதியைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

அது தொடர்பில் குறித்த ஒரு நபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்றார். அதன் பின்னர் காத்தான் குடியைச் சேர்ந்தசிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரும், குறித்த அந்த பெற்றாரும் தகவலறியும் சட்டம் மூலம் விடயத்தைக் கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்கான உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பாடசாலையின் செயற்பாடுகள் சரியா இருப்பதாகத் தீர்மானம் எடுத்து அனுப்பியிருந்தார்கள்.
அதனையும் தாண்டி சட்டத்தரணியூடாக கடிதம் அனுப்பியிருந்தார்கள். வழக்குத் தொடுப்பதாக. அவருக்கும் நாங்கள் உரிய பதிலை பதிவுத் தபால்மூலம் அனுப்பி இருக்கின்றோம்.
இத்தனை பிரச்சனைகளுக்கும் பின்னர் எமது பிரதேச கல்விப் பணிப்பாளர் எமது பாடசாலைக்கு வந்து குறித்த பிள்ளையை இணைக்குமாறு தெரிவித்தார்.
அதற்கு நாங்கள் முற்றாக மறுத்து வருகின்ற பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்வதாகத் தெரிவித்தோம். ஆனாலும் இது தொடர்பில் பிரதேச கல்விப் பணிப்பாளரால் எமது பாடசாலை அதிபருக்கு தொடர்ச்சியான தொந்தரவுகள் இடம்பெறுக் கொண்டிருந்தன.
கடந்த 17ம் திகதி எமது பாடசாலை அதிபர் கொழும்பு கல்வி அமைச்சிற்குச் சென்று கொண்டிருக்கும் போது தொலைபேசியூடாக மிக மோசமான தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தார். இது கல்விச் சமூகம் என்ற ரீதியில் எமக்கு வேதனை அளிக்கும் செயற்பாடாகும்.
இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் எமது பாடசாலை அதிபர் காத்தான் குடியைச் சேர்ந்தவர் அல்ல. அட்டாளச்சேனையில் இருந்து மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் எமது அதிபருக்கெதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம்.
காத்தான்குடி கல்விச்சமூகம் இதற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு சமூகம் ஒருபோதும் வாய்ப்பளிக்கக் கூடாது என்பதே எமது பாடசாலை சமூகத்தின் கருத்தாக இருக்கின்றது.