யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுப் பொருட்களை ஏற்றும் வாகனத்தில் கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது அவ் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை எனவும் நடு வீதியில் குப்பைகளை கொட்டிச் செல்வதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் காணப்படுகின்றது.
இந்நிலையில் ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவுகள் வீதியில் கொட்டப்படுவதுடன், காற்றுடன் அந்த கழிவுப் பொருட்களின் தூசுகள் பறந்து வீதியில் செல்வோரது கண்களுக்குள் செல்வதானால் வாகனத்தை சரியாக செலுத்த முடியாத நிலைகளும் ஏற்படுகின்றன.

இது இவ்வாறு இருக்கையில் இன்றையதினம்(04) காக்கைதீவு சந்தையில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பக்கமாக அண்ணளவாக 200 மீட்டர்கள் தொலைவில் நடு வீதியில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன.
இந்த கழிவுகளானது மாநகர சபையின் கழிவு பொருட்களை ஏற்றும் வாகனத்தில் இருந்து கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த வீதியானது 784, 785 மற்றும் 789 ஆகிய வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் மற்றும் சித்தங்கேணி நோக்கி பயணிக்கும் பிரதான வீதியாக காணப்படுகிறது. இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமையால் மக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய வேளை,
குறித்த வீதியில் யாழ். மாநகர சபையினர் கழிவுகளை கொட்டி இருக்கலாம் எனவும், அவர்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறு வீதியில் கழிவுகளை கொட்டி செல்வதாகவும், தாங்கள் இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை சீர் செய்வதாக தெரியவில்லை என தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகள் என்பன கிராமங்களையும், நகரங்களையும் அபிவிருத்தி செய்வதையும், தூய்மையை பேணுவதையுமே பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகிறன.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே இவ்வாறு வீதிகளில் குப்பைகளை கொட்டும்போது இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு சரியாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.

