கிரிபத்கொட நகரில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிக்கு போலி ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் இந்த மாதம் 21 ஆம் திகதிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மஹர நீதிமன்றத்தின் நீதவான் காஞ்சனா டி சில்வா, விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் டாக்டர் மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிரமாணப் பத்திரம் மற்றும் மருத்துவ அறிக்கையை நிராகரித்து, விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் மில்ரோய் பெரேரா ஆகிய இரு சந்தேக நபர்களையும் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாததால், சிறைச்சாலை மூலம் உத்தரவு அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் நீதவான் குறிப்பிட்டார்.