வெலிக்கடை காவல்துறை காவலில் இருந்தபோது சமீபத்தில் இறந்த 26 வயது இளைஞனின் உடலை தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, இளைஞனின் உடலை தோண்டி எடுத்து மூன்று சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவால் புதிய பிரேத பரிசோதனை நடத்த மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, முழுமையான மற்றும் சுயாதீனமான பிரேத பரிசோதனையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் காவலில் இருந்த போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, மறுநாள் (02) அதிகாலையில், சந்தேகநபரான இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், உயிரிழக்கும் போது இளைஞனின் உடலில் இருந்த காயங்கள் தானாக ஏற்படுத்தியவை என்றும், அந்த நேரத்தில் அந்த இளைஞர் நிலையான மனநிலையில் இருக்கவில்லை என்றும் காவல்துறையினர் கூறியிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், சம்பவம் தொடர்பில் காவல்துறை மீது பாரிய விமர்சனங்களும் சந்தேகங்களும் மக்களால் எழுப்பப்பட்டுள்ளதுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கடுமையான கவலைகளை வெளியிட்டுள்ளது.