புத்தாண்டு ஆரம்பத்தை முன்னிட்டு நாடளாவியளவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் மாத்திரம், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 800 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கண்டறியும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தமின்றி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகளை கண்டு பிடிக்கவும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் சொந்த ஊர்களிலிருந்து கொழும்பு திரும்பும் பொதுமக்கள் காரணமாக வாகன நெரிசல் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், வாகனங்களை அபாயகரமாக செலுத்துவதை தவிர்க்குமாறும், விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் அனைத்து சாரதிகளிடமும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.