வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்களை தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கில் குறிப்பாக வடக்கில் தாயகக் கோட்பாட்டை நிராகரிப்பதற்கு இருக்கும் ஒரே சாட்சிதான் பௌத்த சின்னங்கள்.
அதனால் தான் வடக்கிலுள்ள பிரிவினைவாத அரசியல்வாதிகள் பௌத்த சின்னங்களை அழித்து, அதற்கு மேல் கோயில்களை அமைத்து, அங்கு பழைய கோயில்கள் இருந்தன எனக் கூறி வருகின்றனர்.

இலங்கை என்பது பௌத்த நாடாகும். திஸ்ஸ விகாரையில் திறப்பு விழாவொன்றை நடத்த முடியவில்லையெனில், தமிழர்கள் கூச்சலிடுகின்றனர் என்பதற்காகப் பிக்குகளுக்குத் தானம் வழங்க முடியவில்லையெனில் என்ன நியாயம்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புத்த சாசனம் பாதுகாக்கப்படவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.
அதேவேளை, இலங்கையில் தேசிய கீதம் இரு மொழிகளில் இசைக்கப்படுகின்றது. இது பெரும் தவறாகும். அரசமைப்பை மீறும் செயலாகும்.
இந்தியாவில் எத்தனை மொழிகள் உள்ளன. ஆனால், பெங்காலி மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. அனைத்து மொழிகள் பேசுபவர்களும் தேசிய கீதம் இசைக்கப்படும்போது உணர்வுபூர்வமாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.