மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் இரத்ததானமுகாம் நடைபெற்ற நிலையில் அங்கு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்ததுள்ளனர்.
அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அங்குசென்ற மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் இந்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் வவுணதீவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வருடாந்தம் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.

இதனடிப்படையில் இந்த இரத்ததானமுகாம் வவுணதீவில் ஏற்பாடுசெய்யப்பட்டு நடைபெற்ற நிலையில் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் அனுமதிபெறப்படாமல் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் வேட்பாளர்கள் குறித்த கலந்துகொள்ளப்பட்டுள்ளமை தொடர்பிலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அடிப்படையில் சோதனையிட வந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதன்போது தேர்தல் ஆணைக்குழுவின் அரசியல் கட்சியின் செயற்பாடுகளுக்கான அனுமதிகள் பெறப்படாத காரணத்தினால் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கட்சியின் பதவி நிலை உறுப்பினர்கள் அங்கு இருக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் தெரிவித்ததற்கு அமைவாக உறுப்பினர்கள் கட்சியின் பதவி நிலையினரும் அங்கிருந்து வெளியேறிச்சென்றிருந்தனர்.



