சரி. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து விட்டது.
அடுத்தது என்ன?
உள்ளுராட்சி மன்றங்கள் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதனை உறுதிப்படுத்த வேண்டும்.
அதனை எவ்வாறு மேற்கொள்ளலாம்?
மக்கள் வாக்களித்ததோடு தங்கள் பணி நிறைவடைந்ததாக நினைக்காது, மன்றங்களை தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.
எவ்வாறு கண்காணிக்கலாம்?
உங்கள் வட்டார பிரதிநிதிகள் மூலமாக சபைகள் அமைக்கக்கூடிய குழுக்களில், சபை எல்லைக்குள் வசிக்கும் நிபுணர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுங்கள். மறுத்தால், வெளிப்படுத்துங்கள்.
சபை அமர்வுகளை மக்கள் பார்வையிடுவதற்கு ஆவன செய்யுமாறு உங்கள் வட்டார பிரதிநிதிகளினூடாக கோருங்கள். மறுத்தால், வெளிப்படுத்துங்கள்.
சபைகளின் செயற்பாடுகளை பரிசீலனை செய்யுங்கள். வரவுசெலவுத் திட்டம், விலைமனுக்கோரல் போன்ற விடயங்களை பகிரங்கப்படுத்துமாறு கோருங்கள். மறுத்தால், வெளிப்படுத்துங்கள்.
உறுப்பினர்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒப்பந்தங்கள், வேலைத்திட்டங்கள் வழங்கப்படுவது தொடர்பில் அவதானமாக இருங்கள். விலைமனுக்கோரல், ஒப்பந்தங்கள் வழங்கப்படல் தொடர்பில் முறையான பொறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதனை அவதானியுங்கள்.
தேவைப்படும் போதெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வ விபரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவ்வாறு நீங்கள் வேலைக்கு அமர்த்துபவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று தொடர்ச்சியாகக் கண்காணிக்கிறீர்களோ, அதே போல, சபை உறுப்பினர்களையும் தொடர்ச்சியாகக் கண்காணியுங்கள்.
சபை உறுப்பினர்கள், உங்கள் வாக்குகளால், பதவிக்கு வந்த, உங்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்குகின்ற உங்கள் நன்மைகளை முன்னிறுத்தி பணியாற்ற வேண்டிய அரச ஊழியர்கள் என்பதனை மனதிலிருத்திக்கொள்ளுங்கள்.
சமூக ஊடகங்களில் கிசுகிசுக்கள் எழுதுவதைத் தவிர்த்து, ஆதாரங்களுடன் ஊடகங்களை நாடுங்கள். சமூக ஊடகங்களை சரியாகப் பயன்படுத்துங்கள்.
அதிகாரத் துஷ்பிரயோகம், இலஞ்சம், ஊழல், அசமந்தப்போக்கு போன்ற விடயங்கள் காணப்படின் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம், ஆதாரத்துடன் முறையிடுங்கள்.
ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் (கிசுகிசு) பதிவு செய்வது, காலப்போக்கில் மக்கள் மத்தியில் உங்கள் பதிவுகள் மீதான நம்பிக்கையினை இழக்கச் செய்யும். இது உண்மையான குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
(ஆதாரங்கள் இருந்தால் battinaatham ஊடகத்தையும் நாடலாம்)