இந்த ஆண்டில் இரண்டாவது மின் கட்ணத் திருத்தம் குறித்த யோசனைகள் இலங்கை மின்சார சபையினால் எதிர்வரும் வாரத்தில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் மின்சார கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அது குறித்த யோசனைகள் மே மாதத்தில் தமது ஆணைக் குழுவிற்கு கிடைக்கப்பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண திருத்தம் குறித்த முன்மொழிவுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் அவற்றை ஆய்வு செய்து மூன்று தொடக்கம் ஆறு வார காலத்திற்குள் ஆனைக்குழுவின் தீர்மானம் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குறித்த காலப்பகுதிக்குள் பொதுமக்களின் கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தினால், மின் கட்டணங்களை திருத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் மின் கட்டணங்களில் மாற்றம் செய்வதாக தெரிவித்துள்ளது.
இதுவரையில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எவ்வித முன்மொழிவுகளையும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மின் கட்டணங்கள் சுமார் 20% குறைக்கப்பட வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் மின் கட்டணத் திருத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.