வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றும் அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்ககோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஐக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் தலைவி சட்டத்தரணி அ.சுவஸ்தீகா மற்றும் ஐக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் ஊழியர்கள், தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தற்காலிக ஊழியர்களாக உள்ளவர்களை நிரந்தரமாக்கவேண்டும், மருத்துவ விடுமுறைகளை 14நாட்களாக அதிகரித்துதரவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தற்காலிக ஊழியர்களாக 140பேர் உள்ளதுடன் இலங்கை முழுவதும் 1039 நிரந்தரமற்ற தொழிலாளர்கள் காணப்படுவதாகவும் இவர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாங்கள் மாற்றத்திற்காக வாக்களித்தாலும் இதுவரையில் எங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லையெனவும் இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எங்களுக்கான மாற்றம் ஏற்படும் என நம்புவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
கடும் வெயில் நேரங்களிலும் கடுமையான மழை நேரங்களிலும் நேரம்காலம் பார்க்காமல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள் கடமையாற்றிவரும் நிலையில் ஏனைய ஊழியர்கள் அனுபவிக்கும் உரிமைகளை தாங்கள் அனுபவிக்கமுடியாத நிலையே காணப்படுவதாகவும் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

ஆட்சிமாற்றம் ஏற்பாட்டால் கூட தமக்கு விடிவுகாலம் ஏற்படும் என்ற நோக்கிலேயே தாங்கள் வாக்களித்தபோதிலும், இதுவரையில் தங்களுக்கு எந்த விடிவும் கிடைக்கவில்லையெனவும் இந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் தமக்கான விடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் இதன்போது தெரிவித்தனர்.
அரசாங்கம் தமது கோரிக்கைகளை செவிமடுக்காமல் விடுமானால் அடுத்தமாதம் கொழும்பில் கூட பெரும்போராட்டத்தினை நடாத்த தயாராகிவருவதாகவும் இதன்போதுதெரிவித்தனர்.





