சீனி வரி மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சுத் தவறியமை குறித்தும் குழு தனது அதிருப்தியை வெளியிட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா வருகை தராத நிலையில் அக்குழு பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் குழு கேள்வியெழுப்பியது. இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து குழுவுக்குத் தெரியப்படுத்துவதாக இங்கு வருகை தந்திருந்த நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழங்கை முன்னெடுத்துச் செல்லுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை மீளப்பெற்றுக் கொண்டால் நடவடிக்கை எடுக்க முடியுமா எனவும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இங்கு குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கரிசனையைக் குழுவுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் குழு வேண்டுகோள் விடுத்தது.