ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “இந்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டன.

ஈரானை தாக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு குழுவாக செயல்பாட்டோம். ஈரானின் அணு சக்தி செறிவூட்டல் திறனை நிறுத்தவும், அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்தவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இன்னும் பல இலக்குகள் குறி வைக்கப்பட்டு உள்ளன. அமைதி விரைவாக வரவில்லை என்றால் மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் நாங்கள் தாக்குவோம்” என்று கூறினார்.








