போலி நாணயத்தாளைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதத்தை செலுத்த முயன்ற யுவதி ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டை, பெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய யுவதி ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,

வழக்கு ஒன்று தொடர்பில் குறித்த யுவதிக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் 8,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்த யுவதி 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றுடன் நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்த முயன்றுள்ளார்.
இதன்போது யுவதியிடம் இருந்த 5,000 ரூபா நாணயத்தாள் குறித்து சந்தேகமடைந்த நீதிமன்ற காசாளர், அதனை பரிசோதித்து பார்த்து, நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.








