ஆசியாவின் மிக வயதான யானையான ‘வத்சலா’, நேற்று முன்தினம் (8) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது.
மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது.
காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
வத்சலாவின் முன்னங்கால் நகங்கள் உடைந்து காயமேற்பட்டிருந்த நிலையில் சில நாட்களாக நடக்க முடியாமல் ஓய்வெடுத்து வந்தது. மனிதர்களைப் போலவே, வயதான நிலையில், வத்சலா கண் பார்வை மங்கி அவதிப்பட்டு வந்தது. நாள்தோறும் அதன் பணிகளை மேற்கொள்ள பூங்கா ஊழியர்கள்தான் உதவி வந்துள்ளனர்.
வயது முதுமை காரணமாக, வத்சலா யானைக்கு சிறப்பு உணவுகளையும் தொடர்ந்து கால்நடை மருத்துவரின் தனிக் கவனமும் செலுத்தப்பட்டு வந்த நிலையிலும், வத்சலாவின் உடல்நிலை மோசமடைந்து, நேற்று முன்தினம் பிற்பகலில் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தங்களது மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்த வத்சலா யானை மரணமடைந்த செய்தி அறிந்து மாநில மக்கள் வருத்தமடைந்தனர்.
இது குறித்து இரங்கல் தெரிவித்திருக்கும் மத்திய பிரதேச முதல்வர், எங்கள் வனத்தை மிக அமைதியான முறையில் பாதுகாத்து வந்தது, பல தலைமுறையின் தோழியாக, மத்திய பிரதேச உணர்வின் அடையாளமாக விளங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.








