இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் உதவி செயலாளரையும் ஏனைய இரண்டு அதிகாரிகளையும் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று திங்கட்கிழமை (14) உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாக வாகனங்களை பதிவு செய்தமை தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் உதவி செயலாளரும் ஏனைய இரண்டு அதிகாரிகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபர்களுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.








