தங்க ஜெல் நிரப்பப்பட்ட 3 வில்லைகளை மிக நுணுக்கமான முறையில் உடலுக்குள் மறைத்து வைத்து வெளிநாட்டுக்கு பயணிக்க வந்த விமானப்பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளால் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.மொஹமட் சிஹாப் நபு ஹான் என்ற 29 வயதான இந்த நபர், தங்கம் அடங்கிய 03 வில்லைகளை தனது ஆசன வாய்க்குள் மறைத்துக் கொண்டு செல்ல முயன்றுள்ளார்.
இவ்வாறு சந்தேகநபரின் உடலினுள் கண்டெடுக்கப் பட்ட தங்கம் அடங்கிய மூன்று வில்லைகள் 1.28 கிலோ எடையுள்ளதாகவும், அவற்றில் தங்க ஜெல் இருந்ததாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் 01 132 மூலம் இந்தியாவின் மும்பை செல்வதற்காக இந்த நபர் நேற்று முன் தினம் இரவு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இவர் கொழும்பு கெசல் வத்தை பிரதேசத்தில் வசிப்பவர்.அவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் அவரை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மலக் குடலில் தங்க ஜெல் கரைசல் இருந்தமை தெரியவந்துள்ளது.இந்த ஜெல் கரைசலை தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் மட்டு மே உள்ளதாக சுங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஜெல் கரைசல் அடங்கிய வில்லைகள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வளாகத்தில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரண அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.