மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆன நிலையிலும், சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) குற்றம்சாட்டினார்.
தேர்தல் காலத்தில் “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கை அறிக்கையின் 72ஆம் பக்கத்தில், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை அவை செயல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் 35,000 பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாகவும், அதில் 20,000 பேருக்கு ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என்றும், சுங்கத் திணைக்களம், வரித் திணைக்களம், சுற்றுலாத் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்ததாக சஜித் நினைவூட்டினார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் கூறினார்.
“2/3 பெரும்பான்மை, 159 பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவு மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையை பெற்றிருந்தும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்திற்குப் பயந்து தான் வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது போல உள்ளது,” என சஜித் குற்றம்சாட்டினார்.
பட்டதாரிகள் அரசியல் கைப்பாவைகள் அல்ல; அவர்கள் நாட்டின் முக்கிய வளங்கள் என்பதால், அவர்களுக்கு உலகத்தரப் பயிற்சி வழங்கி, அத்தியாவசிய துறைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இப்போதாவது இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களின் சார்பில் போராடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.








