முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதலமைச்சர், மேற்கொண்டுள்ள நிலையில் 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டுகளை ஈர்க்க முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல இன்று (30) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது விஜய் அரசியல் வருகை குறித்து நீங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை என்ற கேள்விக்கு, “சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என பதிலளித்தார்.
அதேபோல் 2026 திமுகவிற்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி என விஜய் சொல்லி உள்ளார் என்ற கேள்விக்கு, “நான் அதிகம் பேசமாட்டேன். சொல்வதை விட செயலில் காட்டுவேன்.” என்று தெரிவித்தார். புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருமா என்ற கேள்விக்கு? “புதிய கட்சிகள் வருகிறார்களோ இல்லையோ புதிய வாக்காளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.








