முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்திற்கு தாம் ஆதரவாக வாக்களிக்க விரும்பினாலும், இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழு தலைவர் வாக்களிக்க வேண்டாம் என கூறியதன் காரணமாக வாக்களிக்க முடியாமல் போனதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது போன்ற மக்கள் நலனுக்கான சட்டங்களுக்கு இனி கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும், அப்படிச் செய்யப்பட்டிருந்தால் இச்சட்டத்திற்கு நிச்சயமாக ஆதரவு அளித்திருப்போம் என்று வலியுறுத்திய அவர் இலங்கை தமிழரசு கட்சி நிச்சயமாக அந்த சட்டமூலத்திற்கு வாக்களித்து இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மட்டு ஊடக அமையத்தில் நேற்று (14) மேலும் தெரிவித்த அவர்,
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை எனக்கு சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்திருந்ததுநடந்த சந்திப்பு உத்தியோகபூர்வமான ஒன்றல்ல, ஆனால் அதில் மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அவை; மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை, அபிவிருத்தி நிதியத்தின் நிறுவல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் பல்வேறு நிர்வாக, அபிவிருத்தி பிரச்சினைகள். தேர்தல் தொடர்பாக எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை வெளிவந்த பின்பே தேர்தல் நடத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும், ஆனால் விகிதாசார முறையில் நடத்துவதா அல்லது எல்லை நிர்ணயம் செய்த பின்னரா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் அபிவிருத்தி நிதி குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை சாணக்கியன் சுட்டிக்காட்டியதுடன், ஜனாதிபதி விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மாவட்ட மட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதித்ததாகவும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான தேவையற்ற சலுகைகளை நீக்குவது மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகும் என்பதால், அந்த சட்டமூலத்தை இலங்கை தமிழரசு கட்சி ஆதரிக்க வேண்டியிருந்தது என்றும், தாம் அதற்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு மக்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் நலனுக்காக கொண்டு வரப்படும் சட்டங்களுக்கு எப்போதும் ஆதரவு தருவதே தனது நிலைப்பாடு என்றும், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நல்லாட்சி காலத்திலும் சிறிய குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமே சிலர் கைது செய்யப்பட்டு, பெரும் ஊழல் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்ததாகவும், எதிர்காலத்தில் பெரிய அளவிலான ஊழல் வழக்குகள் சரியான முறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து பல தகவல்களை தாம் அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாகவும், ஊழலை ஒழிக்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.








