நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகும் அதிக மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து, நில்வளா கங்கை, கிங் கங்கை, களு கங்கை, மகாவலி கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் களனி மற்றும் மகாவலி கங்கைகளின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், நாவலப்பிட்டி, பேராதனை மற்றும் கம்பளை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, களனி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நோர்வுட், கித்துல்கல, அவிசாவளை மற்றும் யட்டியாந்தோட்டை பகுதிகளிலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
களு கங்கையைச் சுற்றியுள்ள இரத்தினபுரி, மில்லகந்த மற்றும் மகுர ஓயா பகுதிகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், சில பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பகுதிகளிலும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நில்வளா மற்றும் கிங் கங்கைகளின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் தவலம, ஹினிதும மற்றும் நாகொட பகுதிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நில்வளா கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அக்குரஸ்ஸ மற்றும் பிடபெத்தர பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் மழைவீழ்ச்சி நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்தனகலு ஓயா பகுதியில் தற்போது சாதாரண நீர்மட்ட உயர்வே காணப்பட்டாலும், மழைவீழ்ச்சி மேலும் அதிகரித்தால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.







