சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அனோஜன் பதிவிட்ட கருத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட விவகாரத்தின் பின்னணியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், அனோஜன் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்களில் இன நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு, நாட்டின் இன நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








