சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி, பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இன்று (20) கல்முனை, நற்பிட்டிமுனை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அனோஜன் தொடர்பான வழக்கை மீளாய்வு செய்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை சவூதி அரேபிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் தொடர்ந்து தொடர்புகொண்டு, அனோஜனுக்கு உரிய சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதன்போது, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.













