அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வின்சென்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், பழைய மாணவர் சங்க அவுஸ்திரேலியா கிளை உறுப்பினருமான கிருஷ்ணானந்தி மகேஸ்வரன், குமாரகுலசிங்க குடும்பத்துடன் இணைந்து சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் கல்லூரி நூலகத்தை டிஜிட்டல் மயப்படுத்தி, இணையவழி நூலகமாக மாற்றி வழங்கியுள்ளனர்.
இந்த முயற்சியின் மூலம் நூலகம் கணினி வசதியுடன் முழுமையாக குளிரூட்டப்பட்ட, நவீன நூலகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணானந்தி அவர்களின் உயரிய எண்ணக்கருவிற்கு அமைவாக, மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் அறிவு வளர்ச்சிக்காக இந்த டிஜிட்டல் நூலகம் நிறுவப்பட்டது.
பாடசாலை முதல்வர் தவதிருமகள் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகர் ரவிக்குமார் முத்துராஜா, இந்த இணையவழி சேவையை செயல்படுத்த ஆலோசனையும் பூரண ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர்கள், துணை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.












